சிறுமியை கேலி செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை; நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் ராமர் (வயது 23). கூலி தொழிலாளி. இவர் மானூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அடிக்கடி கேலி கிண்டல் செய்தார். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து ராமரை எச்சரித்தார். ஆனாலும் ராமர் தொடர்ந்து சிறுமியின் ஊருக்கு சென்று அவரை கேலி செய்தார். கடந்த 16-10-2018 அன்று சிறுமி சாலையில் நடந்து சென்றபோது மீண்டும் ராமர் அவரை கேலி செய்தார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி குற்றம் சாட்டப்பட்ட ராமருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெபஜீவராஜா ஆஜராகி வாதாடினார்.

Leave a Reply