திருச்சி பாலக்கரையில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் ‘திடீர்’ முற்றுகை

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பீச்சாங்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் 2018-ம் ஆண்டு 642 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில் சிலருக்கு முறைகேடாக வழங்கிய வீடுகளை திரும்ப பெற வேண்டும் என்றும், நிரந்தர குடிநீர் மற்றும் சுகாதார தேவைக்கு தேவையான நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் பா.ஜனதா கட்சி மண்டல தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தங்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கும் போராட்டம் நடத்துவதற்காக நேற்று திரண்டு வந்தனர்.

பின்னர், அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக பொறியாளர் அழகு பொன்னையா ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ள குடியிருப்பு ஒன்றுக்கு மாதம் ரூ.250 வழங்க வேண்டும். ஆனால், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் அவ்வாறு வாரியத்திற்கு செலுத்தவில்லை. கலெக்டர் அறிவுரைப்படிதான் வீடுகள் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சமுதாய கூடத்தை மாநகராட்சி நிர்வாகம் கட்டித்தரும் என பதில் அளித்தார்
மேலும் வீடு பெற்றவர்கள் ஆண்டுக்கு பராமரிப்பு தொகை ரூ.19¼ லட்சம் செலுத்த வேண்டும். ஆனால் கடந்த ஜனவரி வரை ரூ.73 ஆயிரம் மட்டுமே செலுத்தி உள்ளனர். மேலும் போதிய நிதி இல்லை என்றார்.

பின்னர் குடியிருப்புவாசிகள் தரப்பில், தற்போது அடுக்குமாடி கட்டவும், அலுவலகம் மேலே கூடுதல் கட்டிடம் கட்டவும் நிதி எப்படி வந்தது?. உங்களால் நிர்வகிக்க முடியவில்லை என்றால் விலகிக்கொள்ளுங்கள். நாங்களே அனைத்து பணிகளையும் செய்து கொள்கிறோம்.

அரசு பணத்தைத்தான் செலவு செய்ய சொல்கிறோம். உங்கள் சொந்த பணத்தை அல்ல என்று பதில் அளித்தனர். இதனால் இருதரப்பிலும் வாக்குவாதம் முற்றவே அலுவலகத்திற்குள் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.