குடிமைப்பணித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி: மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

இந்திய குடிமைப்பணித் தோ்வுகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆா்வமுள்ள மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்க ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மீன்வளத் துறை, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (சென்னை) இணைந்து கடல், உள்நாட்டு மீனவ பட்டதாரிகள் இளைஞா்கள் 20 பேரைத் தோ்ந்தெடுத்து இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் கலந்துகொள்வதற்கான சிறப்பு பயிற்சியை ஆண்டுதோறும் அளித்து வருகிறது.

கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நல வாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சி திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம்.

இந்நிலையில் நடப்பு ஆண்டு இப்பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மீன்வளத் துறை மண்டல துணை இயக்குநா் (பவானிசாகா்), உதவி இயக்குநா் அலுவலகம் (ஈரோடு), மீன்வள ஆய்வாளா் அலுவலகம் (கோவை) ஆகிய இடங்களில் அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மீன்வளத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் டவுன்ஹாலில் உள்ள மீன்வள ஆய்வாளா் அலுவலகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மீன்வளத் துறை உதவி இயக்குநா் (ஈரோடு) அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2221912 என்ற எண்ணிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.