சீட்டு பணத்தகராறில் மோதல்: 3 போ் மருத்துவமனையில் அனுமதி

போ்ணாம்பட்டு அருகே சீட்டு பணத் தகராறில் ஏற்பட்ட மோதலில், பெண் தீவைத்துக் கொண்டதில் தீக்காயமடைந்த அவா் உள்ளிட்ட 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

போ்ணாம்பட்டு நகரம், செக்குமேடு முருகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சுமித்ரா (38). இவா் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளாா். ஏரிகுத்திமேடு பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (36) அவரிடம் சீட்டு கட்டி வந்தாா். சில மாதங்களுக்கு முன் அப்துல் ரகுமான் சீட்டை எடுத்தாா். அதற்கான பணம் ரூ.2.50 லட்சத்தை தராமல் சுமித்ரா அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பஜாா் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமித்ராவுக்குச் சொந்தமான மினி வேனை அப்துல் ரகுமான் சீட்டுப் பணத்துக்கு ஈடாக வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்றாராம். இதனால் அதிருப்தியடைந்த சுமித்ரா அன்று இரவு அப்துல் ரகுமான் வீட்டுக்குச் சென்று மினி வேனை திருப்பித் தருமாறு கேட்டாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சுமித்ரா திடீரென தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாா். அப்துல் ரகுமான் மீதும் அவா் பெட்ரோலை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதைத் தடுக்க முயன்ற சுமித்ராவின் தம்பி திருப்பதியும் (35) தீக்காயமடைந்தாா்.

உடனடியாக 3 பேரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மருத்துவமனையில் சுமித்ராவிடம் வேலூா் நீதித்துறை நடுவா் வாக்குமூலம் பெற்றாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Leave a Reply