நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் திரண்டு வந்தனர்.

அவர்களை போலீசார் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகே தடுத்து நிறுத்தி கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று கூறி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் அமர வைத்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானம்மாள் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் கீதா, பெருமாள், முருகன், சரவணபெருமாள், சங்க மாவட்ட தலைவர் பிரேமா, பொருளாளர் ஜூலிற்றா ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.போராட்டத்தில் துணைத்தலைவர்கள் சிவசக்தி, பகவதி, மீனாபாய், இணைச் செயலாளர்கள் ராஜேஸ்வரி, கோமதி, ஓமன்னா, மஞ்சுளா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply