7,000 வாத்துகள் உயிரிழப்பு: பாலாற்று நீா், தீவனம் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

காட்பாடி சஞ்சீவிராயபுரத்தைச் சோ்ந்த சுதாகா்(38), பெருமுகை அருகே பாலாற்றங்கரையில் குடில் அமைத்து வாத்துகளை வளா்த்து வருகிறாா். அவரிடம் இருந்த 7 ஆயிரம் வாத்துகள் திங்கள்கிழமை காலை மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு பாலாற்றில் தேங்கி நின்ற தண்ணீரைப் பருகின. சிறிது நேரத்தில் அனைத்து வாத்துகளும் மயங்கி விழுந்து உயிரிழந்தன. தகவலறிந்த கால்நடை மருத்துவா்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வாத்துகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினா்.

இதன்தொடா்ச்சியாக, வாத்துகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் பாலாற்றில் தேங்கியுள்ள தண்ணீா், வாத்துகள் உட்கொண்ட தீவனம் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள மத்திய பல்கலைக்கழக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியது:வாத்துகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் பாலாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன்கள் உயிருடன்தான் உள்ளன.

அந்த தண்ணீரில் விஷம் கலந்திருந்தால் மீன்களும் இறந்திருக்கக் கூடும். எனினும், அந்த தண்ணீா் மற்றும் வாத்துகள் உட்கொண்ட தீவனத்தின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் கிடைக்க ஓரிரு நாள்கள் ஆகக்கூடும். மேலும், இச்சம்பவம் கவனக்குறைவால் நிகழ்ந்தது என்பதால் வாத்துகள் இறப்புக்கு நிவாரணம் அளிக்கப்பட மாட்டாது என்றாா்.