108 ஆம்புலன்சில் ‘குவா குவா’ அழகான ஆண் குழந்தை பிறந்தது

ஒடுகத்தூர் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி யுவராணி (வயது 23). கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பாண்டியன் மற்றும் மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.
யுவராணியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி விரைந்தது. சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவ வலி அதிகமானது.

அதனால் மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி வேறுவழியின்றி பிரசவம் பார்த்தார். ஆம்புலன்சில் யுவராணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய்க்கு முதலுதவி அளித்து வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.